Monday 24 January 2011

திருடிய கதை


உங்களுக்கு இலக்கியா தேவியை-த் தெரியுமா? என்னது? யார் அந்த அம்மா என்று கேட்கறீர்களா? எப்போதேனும் கொழும்பு நகர வீதிகளை கடக்கும் போது சத்தம் போட்டு கேட்டு விடாதீர்கள். அவளுக்கு தெரிந்தால் பேய் பிடித்து ஆடினாலும் கூட அந்த மாதிரி அதிர்ச்சி இருக்காத அளவுக்கு, உங்களை உலுக்கி எடுத்துவிடுவாள்.


இலங்கையின் தலைநகரத்தில் பிரதான பகுதியில் வசிக்கும் இலக்கியா தேவியைப் பற்றி உங்களுக்கு ஓர் அறிமுகம். மன்னாரைச் சுற்றியுள்ள கிராமம் ஒன்றில் பிறந்தவளுக்கு பள்ளிப் படிப்பை முடிப்பதே பெரும் பாடாக இருந்தது. அதன் பின் தோழிகளுடன் ஊர்சுற்றி காலம் கழித்தவளுக்கு கணவனாக சுகுமாரன் வாய்த்தான். தொழில் நிமித்தமாக அவர் கொழும்புக்கு இடம் பெயர உடன் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வந்தவள்தான் இன்று கொழும்பு நகர மக்களை ஆட்டிப் படைக்கிறாள். மன்னிக்கவும், இதை நான் சொல்லவில்லை. இலக்கியா தேவியின் வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் சில சமயம் அவள் காதுபடவும், சில சமயம் மறைமுகமாகவும் சொல்லும் பேச்சு இது.

கணவன் தொழில் விசயமாக வீடு தங்காமல் அலைந்து கொண்டிருக்க, தனிமை கிடைத்த நேரத்தில்தான் இலக்கியாவுக்கு தானும் ஏதேனும் ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஓவியம், நடனம், சமையல், பாட்டு என தனக்கு தெரிந்த கலைகளை ஒரு துண்டு பேப்பரில் எழுதி, தினமும் அதற்கான பயிற்சிகள் செய்து வந்தாள். `ஒரு கிழமைக்குள் எந்த கலை கைகூடுகிறதோ(?) அதை அப்படியே பிடித்து மேலும் மேலும் கற்று உயர்ந்து நாடுதழுவிய அளவில் பரிசுகள் வாங்கி குவிப்பது, மற்றும் சிறப்பு விருந்தினராய் பல வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டும்` என்று எண்ணியபடியே கனவில் சஞ்சரித்தவள் மயங்கி கீழே விழுந்தபோது உண்டான தழும்புதான் முன்நெற்றியில் சிறு வடுவாக இருக்கிறது. அதை
மறைக்கத்தான் நெற்றியின் இடது பக்கத்தில் கூந்தலை முன் நோக்கிய வண்ணம் வெட்டி விட்டிருக்கிறாள்.


கலைகளில் பயிற்சி எடுக்க வேண்டும் என அந்த கிழமையில் ஏழு நாளும் சமைக்காமல் புருஷனை ஹோட்டலில் சாப்பிடச் சொல்லிவிட்டவள், முதல் நாள் நடனமாடிப் பார்க்க முயற்சித்தாள். ஆனால் அன்றுவரை ஒருநாளும் நடனவகுப்புக்கு சென்றது கிடையாது. அன்று டி.வி பெட்டியில் பாட்டை சத்தமாக வைத்து, அதில் நடனமாடும் பெண்னைப் போலவே கையும் காலையும் ஆட்டிப் பார்த்தாள். அதாவது வீடு அதிரும் படி குதித்ததில் இடுப்பு சுளுக்கியதுதான் மிச்சம். போதாதற்கு மாடியில் குடியிருந்த வீட்டின் உரிமையாளர், கதவைத் தட்டி, `தங்கச்சி இலக்கியாதேவி இது பழைய கட்டிடம், வீண் முயற்சி செய்து என் சொத்தில் மண் அள்ளிப் போட வேண்டாம்` என பணிவுடன் கேட்டுக் கொள்ள, அப்போதே நடனமாடுவதை கை விட்டாள் இலக்கியா.

அடுத்த நாள் ஓவியம் வரைவதில் இறங்கினாள். ஒரு மான் படத்தை எடுத்து வைத்துக் கொண்டு அதே மாதிரியே வரைய பழகினாள். என்ன செய்தும் மானுக்கு கால்கள் வளைந்து வரவில்லை. வரைந்த அளவுக்கு ஓவியத்தை வீட்டின் ஹாலில் மாட்டி வைக்க, நடுராத்திரி-க்கு மேல் வேலை முடித்து வந்த அவளின் கணவன் கதவை திறந்தவுடன் அந்த படத்தைப் பார்த்து பயந்து காய்ச்சலில் விழுந்தார்.

அதற்குப் பிறகு ஒரு நாள் சமையல் கலை வல்லுநராக முயற்சித்து, அவள் பருப்பில் செய்த காப்பியை குடித்த பக்கத்து வீட்டு நாய் பரலோகம் போய் சேர்ந்தது. அதன் உரிமையாளருக்கு இன்று வரை விபரம் தெரியாததால்தான் ஊருக்குள் உயிருடன் நடமாடுகிறாள் இலக்கியாதேவி.

இப்படி எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிய, ஒரு சுப வேளையில் அவளுக்கு சிறுவயதில் பாட புத்தகத்தில் படித்த கதை ஒன்று நியாபகத்திற்கு வந்தது. அதை அப்படியே ஆண் பெண் பால்களை மாற்றி, ஊர் பெயரை மாற்றி தன் சொந்த முயற்சியில் ஒரு தாளில் எழுதிப் பார்க்க, அது புதிய கதை வடிவில் வந்தது. தன் திறமையைக் கண்டு அதிசியத்துப் போனவள், அன்றிலிருந்துதான் எழுத்தாளராக அவதாரம் எடுத்தாள்.


உடனே வீட்டு வாசலில் 'எழுத்தாளர் இலக்கியா தேவி' என பெயர் பலகையை தயாரித்து மாட்டியவள், கணவரிடன் சொல்லி ஒரு பண்டில் வெள்ளைத்தாள்களும் வாங்கி வைத்துக்கொண்டாள். தன் வீட்டிற்கு அடிக்கடி வந்து போகும் பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் உறவினர்களிடமும் இனிமேல் தான் பெரிய எழுத்தாளர் என்றும் எப்போதும் கதை எழுதும் பணியில் மூழ்க வேண்டியிருப்பதால் தன்னை சந்தித்து தொந்தரவு செய்ய வேண்டாமென கேட்டுக் கொண்டாள்.



தன் திறமையை உலகத்துக்கு அறிவித்து காட்டுகிறேன் என சவால் விட்டாள். ஒரு மதிய வேலையில் பல புத்தகங்களை மொத்தமாக விரித்து வைத்து அதில் இருந்த கதைகளை பகுதி பகுதியாக காப்பி அடித்து, இடையிடையே சில மாற்றங்கள் செய்து ஒரு கதையாக எழுதி அனுப்பினாள். யார் கெட்ட நேரமோ, அந்த கதை 'நெஞ்சத்துள் நீ' என்ற பெயரில் ஒரு பத்திரிக்கையில் வந்துவிட்டது.


அப்போதில் இருந்து அவள் தரையில் நடக்கவில்லை. எதிர் தோன்றும் எல்லா நபர்களிடமும், தான் எழுதிய கதையை படித்தீர்களா என கேட்டாள். இல்லை என்றவர்களுக்கு தானே காசு போட்டு புத்தகத்தையும் வாங்கித்தந்தாள். தான் சகலகலாவல்லி என்றும் தனக்கு வாய்த்த கணவன் அந்தளவுக்கு புத்திசாலி இல்லை என்றும் அறிந்தவர்களிடம் சொல்லி வந்தாள்.

இலக்கியாவின் கதையை படித்து பாராட்டாதவர்கள் யாவரும் பொறாமை பிடித்தவர்கள் என்றும் தமிழ் இலக்கிய அறிவு இல்லாதவர்கள் எனவும் அவளால் குற்றம் சாட்டப்பட்டார்கள். யாருக்கேனும் பசித்தால், தாராளமாய் இலக்கியாதேவி வீட்டின் கதவை தட்டி, 'மேடம் நீங்க எழுதிய கதை அருமை' என்று சொன்னால் போதும். வயிராற சாப்பாடு போட்டு அனுப்புவாள். அவள் தெருவில் இருக்கும் வேலை வெட்டி இல்லாதவர்கள் அவளைப் பார்க்கும் போதெல்லாம், 'மேடம் உங்களை மாதிரி ஒரு எழுத்தாளரை பார்த்தது இல்லை, என்ன அறிவு, என்ன தெளிவு' என்று முகஸ்துதி பாடியே அடிக்கடி ஐந்து பத்து பணம் வாங்கிக் கொள்கிறார்கள் என்பது செவிவழிச் செய்தி.

இப்படியாக எழுத்தாளர் ஆனவள், தன்னை மேலும் பிரபலபடுத்திக் கொள்ள மற்றும் பிற எழுத்தாளர்களுடன் நட்புறவை வளர்க்க இலக்கிய சொற்பொழிவுகளுக்கும் வாசகர் கூட்டங்களுக்கும் செல்ல ஆரம்பித்தாள். அங்கே பேசுவதற்கு அதிக ஞானம் தேவைப்பட்டதால், தெரிந்த தெரியாத எல்லா புத்தகங்களையும் வாங்கி குவித்தாள். (பணம் உபயம் கணவர் சுகுமாரன்). அதில் ஆங்காங்கே சில வரிகளை மட்டும் படித்துவிட்டு, 'லெனின் என்ன சொல்றார்னா? ஓஷோ என்ன சொல்றார்னா? என்று அவள் அடித்து விட்டதில் தலை தெறித்து ஓடியவர்கள் அதிகம்.
குறிப்பிட்ட புத்தகத்தின் பெயரைச் சொல்லி, படித்துவிட்டீர்களா? என கேட்பாள். இல்லை என்று நாம் சொன்னால் உடனே புத்தக அறிவில்லாத தற்குறிகள் என்பாள். அதற்கு பயந்தே இப்போதெல்லாம் அரிதாக அவள் வீட்டிற்கு உறவினர்கள் வருகிறார்கள். வரலாற்றில் ஆங்கிலேயர்கள் வருகை என்று ஒரு ஆண்டை குறிப்பிடுவார்களே, அதுபோல இவள் தன் கதை வெளியான தேதியை சொல்லிக் கொண்டிருப்பாள். டென்ஷன் ஆன ஒரு நபர் 'மேடம் எப்போ அடுத்த கதை எழுதப் போறீங்கன்னு சொல்லுங்க?' என்று கேட்டதும் அவள் எழுதியதுதான் ஒன்றரை கதைகள். அதாவது பாதி பாதி வரை எழுதிய மூன்று கதைகள். எத்தனையோ முயற்சி செய்தும் இந்த மூன்று கதைகளை முடிக்கிற மாதிரி தெரியவில்லை.

அதன் விளைவாகத்தான் அந்த முடிவை எடுத்தாள். அதாவது இலக்கியாதேவி என்ற பெயரில் சிறுகதைகளுக்கான அறக்கட்டளை ஒன்றை ஆரம்பிப்பது. அதன் சார்பாக வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு இடையே ஒரு போட்டி வைத்து தேர்வாகும் கதைக்கு பரிசு தருவது என்பதுதான். அறக்கட்டளை ஆரம்பிக்கும் நோக்கில் தன் கணவரிடம் இரண்டு லட்சத்து அம்பதாயிரம் ரூபாய் பணம் வேண்டுமென அடம் பிடித்து வாங்கினாள். பணத்தை எண்ணிக் குடுத்துவிட்டு வெளியே கிளம்பிப்போன அவள் கணவர் மாதம் ஆறாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை. கதிர்காமத்தில் சாமியாராக அலைவதாக வதந்தி.

ஆக அறிவிப்பது என்னவெனில் புதிதாக கதை எழுத ஆரம்பிப்பவர்கள் எழுத்தாளர் இலக்கியாதேவியின் அறக்கட்டளையை அணுகவும். முடிந்தால் அவளின் கணவரையும் தேடிப் பிடித்து தரவும். அதற்கும் தக்க சன்மானம் வழங்கப்படும்.
                                                                 நன்றி