Thursday 21 October 2010

நம்பிக்கை

குளிர்காற்று வீசுகின்ற தருணம், கருமேகங்கள் ஒன்றோடு ஒன்று உரையாடிக்கொள்ள மழை கொட்டும்வேளையில்  `சாவித்திரி வீட்டு டெலிபோன் அவசரமாக அழைத்தது.  `ஆட்டோ பாபு  பேசுகிறேன். நான் உங்க வீட்டு வாசலில் நிக்கிறேன், உங்க கணவர் அனுப்பினார்’ என்றான் பாபு. காரணம் அவளின்  கார் பழுதடைந்திருந்ததால்  அன்று அவள் ஆட்டோவுக்காக காத்திருந்தாள். ஓடி வந்து ஆட்டோவில் ஏறினாள் அந்த இளவயது பெண்குட்டி..

``கர்ப்பிணிப்பெண்களுக்கு இலவசம்`` என்ற வாசகத்தை உற்று நோக்கிய சாவித்திரி.    ’உன்னோட மனைவி இந்த ஆட்டோவில் ஏறியிருக்கிறாளா?’ என்றாள். உடனே பாபுவும், ‘ஆம் தினமும் ஒரு ரவுண்டு வருவா என்றான்.

சாவித்திரி:   ‘இதுவரை எத்தனை கர்ப்பிணிப்பெண்களை இலவசமாக பிரசவத்திற்கு அழைத்துப் போயிருக்கிறாய்?’

பாபு:   ‘இருபது பேராவது இருக்கும்’

உனக்கு எத்தன பசங்க என்று சாவித்திரி பாபுவிடம் கேற்க..  இன்னும் போராடுகிறோம் என்றான் பாபு.

அந்த பிரசவ ஆஸ்பத்திரியின் முன் ஆட்டோவை நிருத்தச் சொல்லி தன் விசிட்டிங் கார்டை அவனிடம் கொடுத்தாள்.

“நீ செய்றது பெரிய தொண்டு. உன் மனைவியின் நம்பிக்கை வீண் போகாமலிருக்க, நீயும் அவளும் ஆஸ்பத்திரியில் என்னை வந்து பாருங்க. உங்கள் மடியில் ஒரு குழந்தையைத் தவழச் செய்வது எனது பொறுப்பு”

என்றாள் பிரபல குழந்தை பிறப்பு நிபுணரான டாக்டர் சாவித்திரி.