விளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மக்கள் இறைவனை ஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர்.
சங்ககால
இலக்கியங்கள் இவ்வழிபாட்டை "கார்த்திகை விளக்கீடு' என்று குறிப்பிடுகின்றன. பெண்கள்
விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை ஆகிய எட்டுத்தொகை நூல்களில்
இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கிய ஆய்வாளர்கள், கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக்
கொண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர். மாதம் தோறும்
கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரமே
"பெரிய கார்த்திகை' எனப் போற்றப்படுகிறது. அருட்பெருஞ்ஜோதியாகிய சிவன்,
தனிப்பெருங்கருணையோடு நமக்கு அருள் புரியும் நாள் திருக்கார்த்திகை.
இறைவனுக்கு
நைவேத்யம் செய்யாவிட்டால் வழிபாடு நிறைவு பெறுவதில்லை. கார்த்திகைக்குரிய பிரசாதமாக
கார்த்திகைப் பொரியை இறைவனுக்கு படைப்பது மரபு. வெல்லம் சேர்த்த பொரி உருண்டையோடு,
அப்பம், பாயாசம், பிடிகொழுக்கட்டை ஆகியவையும் நைவேத்யத்தில் இடம்பெறும்.
திருக்கார்த்திகை நாளில் பிரதான திருவிளக்கோடு இருபுறமும் துணை விளக்குகளை அவசியம்
ஏற்றவேண்டும். வீட்டு வாசலிலும், வீட்டுக்குள்ளும் முக்கிய இடங்களில் தீபம் ஏற்ற
வேண்டும். அப்போது, கைக்குழந்தைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சாம்பிராணி, பத்தி போன்ற தூபதீபங்களை முதலில் விநாயகருக்கும், பின் திருவிளக்கு
ஜோதிக்கும் காட்டி, பின் மற்ற தெய்வப்படங்களுக்கு காட்ட வேண்டும்.
இன்று மாலை
வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன், விளக்கிற்கு சந்தனம் குங்குமம் இடவேண்டும்.
விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து,
தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது,
ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி,
வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்துக் கொள்ள வேண்டும். இதனால், வீட்டில்
செல்வம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும்
சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன்,
சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த
பொட்டுகள் குறிக்கின்றன.
கார்த்திகை காலம் மட்டுமின்றி, விளக்கேற்றுவது எப்போதுமே
நன்மை தரும். தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்ற உகந்த நேரங்களாகும்.
குறிப்பாக சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி)
விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை
4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும்
உகந்தவை. கல்வியில் உயர்வு, திருமணத்தடை நீங்க இந்த வேளையில் தீபமேற்றுவர்.
கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவது பற்றி
சம்பந்தரே பாடியிருக்கிறார். மயிலாப்பூரில் பூம்பாவை என்ற பெண் திடீரென மரணமடையவே,
ஞானசம்பந்தர், அவள் மீண்டும் உயிர் பெறுவதற்காகப் பதிகம் பாடினார்.
அதில்,"விளக்கீடு காணாதே போதியே பூம்பாவாய்' என்று பாடுவதில் இருந்து இந்த விழாவின்
மேன்மையை அறியலாம்.
இன்று நம் வீடுகளில் ஏற்றும் கார்த்திகை தீபம், இனி நடக்கப்
போகும் நாட்களில் எல்லாம் சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கட்டும்.